பல இந்தியர்கள், அமெரிக்காவில் தங்கள் உயர் பதவியை விட்டுவிட்டு தாய்நாட்டிற்கு திரும்பி, சேவை செய்ய வந்த கதைகளை படித்துள்ளோம்... ஆனால் இது சற்று வித்தியாசமான கதை. ஒரு நல்ல எதிர்காலம் கொண்ட துறை மற்றும் பணியை உதறி தள்ளிவிட்டு, அமெரிக்க கிரீன் கார்டையும் நிராகரித்துவிட்டு ஓர் உன்னத பணியை தொடங்க இந்தியா திரும்பிய சென்னையை சேர்ந்த ஹரி பாலாஜியை தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் சந்தித்தோம். அவருடன் உரையாடியதில் இருந்து...
ஹரி பாலாஜியின் அமெரிக்க பயணம்
சுவிட்சர்லாந்து, சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பள்ளியில் பயின்ற ஹரி பாலாஜி ஹோட்டல் நிர்வாகத்தில் பல வருட அனுபவமுள்ளவர். 2001 ஆம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து, மேலாண்மை பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா செல்ல இவருக்கு வாய்ப்பு வந்தது. "அமெரிக்கா செல்வது என் வாழ்நாள் கனவு, என் எதிர்காலத்தை நோக்கி ஆவலுடன் அமெரிக்காவுக்கு பயணமானேன்" என்கிறார் ஹரி பாலாஜி. ஆனால் விதி வேறு மாதிரி அமைந்தது.
இவர் பயணித்த நாள் செப்டம்பர் 11 2001 ஆம் ஆண்டு. அன்று தான் அமெரிக்கா மீதான, உலகின் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைப்பெற்றது அனைவருக்கும் தெரியும். இதனால் ஹரி பயணித்த விமானம், அவர் புறப்பட்ட சூரிச் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பல கனவுகளுடன் அமெரிக்கா புறப்பட்ட முதல் பயணமே தோல்வியில் முடிந்ததில் ஹரி பாலாஜிக்கு மிக பெரிய வருத்தம் தான். இருப்பினும், தாக்குதலுக்கு பின் அமெரிக்கா மற்றும் சூரிச் விமான நிலையங்களில் குவிந்த மக்கள் வெள்ளத்தை அந்நாட்டவர் சமாளித்த விதத்தையும், போர்கால அடிப்படையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, ஓரிரு நாட்களில் சகஜ நிலைக்கு கொண்டு வந்ததையும் பார்த்து ஆச்சர்யமடைந்தார் ஹரி.
மேலைநாடுகளில் பேரிடர் மேலாண்மை
"ஒரு மிகப்பெரிய பேரழிவு (Disaster) நிகழ்ந்தும் எந்த சலசலப்புமின்றி ஒரு வித கட்டுப்பாட்டுடன் அரசும் அங்குள்ளவர்களும் இயங்கியது என்னை வியக்க வைத்தது. இந்தியாவில் இது போல் நிகழ்ந்தால் எம்மாதிரியான தயார் நிலை உள்ளது?" என்ற சிந்தனைகள் இவரின் மனதில் ஓடத்துவங்கின.
இரு தினங்களுக்கு பிறகு விமானங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டவுடன் ஹரி, சூரிச்சிலிருந்து மீண்டும் அட்லாண்டா சென்றடைந்தார். அமெரிக்காவில் இந்த பெரிய தாக்குதல் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டது, அரசு இயந்திரம் செயல்பட்ட விதம், மக்களின் ஒத்துழைப்பு இவைகளை செய்திகள் மூலம் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார் ஹரி.
ஹரி, பயிற்சி மேற்கொண்ட பிரபல ஹோட்டலில் கருத்தருங்கு ஒன்றில் பேசிய நியுயார்க்கின் அப்போதய மேயர் கியுலானி, தாக்குதலுக்கு பின் தாங்கள் எவ்வாறு நிலைமையை சில மணி நேரங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதை பற்றி உரையாற்றினார். "இது எனக்கு ஓர் புரிதலையும் பேரழிவின் போது, மேலைநாடுகளை விட இந்தியா போன்ற நாடுகள் எவ்வித ஏற்பாடோ, முறையையோ கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிந்தது" என்கிறார். இந்தியாவில் மழை, வெள்ளம், பூகம்பம், தாக்குதல் என எவ்வித பேரழிவு ஏற்பட்டாலும், பல நாட்களுக்கு சோகமும், இழப்புகளுடன் மீண்டெழ முடியா துன்பத்தை மட்டும் பார்த்தது தான்அவரின் நினைவுக்கு வந்தது.
மேலாண்மை பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அமெரிக்கா முழுதும் பல பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது ஹரி பாலஜிக்கு. 2005ல் அமெரிக்காவை ஹரிக்கேன் காத்ரீனா தாக்கியபோது, அவர்களின் பேரழிவு மேலாண்மை குழுக்கள் செயல்பட்டதை நேரில் பார்த்த ஹரி "காவல்துறை, மருத்துவத்துறை, அரசுத்துறை என்று அனைவரும் ஒரு சேர்ந்து பணி புரிவதே அவர்களின் பேரிடர் மேலாண்மையின் வெற்றி என புரிந்து கொண்டார். அதேப்போல் "அங்கு "வருமுன் காப்போம்" என்ற விழிப்புணர்வும், இந்தியாவில் "வந்தபிறகு பார்ப்போம்" என்ற நிலையே இருந்தது என ஆராய்ச்சியிலும், நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்" என்கிறார்.
இந்தியா திரும்பி பேரிடர் மேலாண்மை பணியை தொடங்கியது
ஹரிக்கேன் காத்ரீனா சமயத்தில் புயலில் வீடு வாசல் இழந்த பலரை தங்களது ஹோட்டலில் இலவசமாக அரசு தங்க வைத்தபோது அவர்களின் நிலைமையை நேரில் பார்த்த ஹரி பாலாஜி பல உண்மைகளையும், வாழ்வின் அர்த்தத்தையும் உணர்ந்த்தார். "நிலையற்ற உலகத்தில் நாம் வாழ்கிறோம்; இருக்கும் போது முடிந்தவரை பிறருக்கு உதவும் வகையில் சேவை என்று இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு உபயோகமான பணியை செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன்" என்கிறார் உணர்ச்சி பொங்க.
திருப்புமுனையாக அமைந்த இந்த சம்பதவத்திற்கு பிறகு, தான் விண்ணப்பித்திருந்த அமெரிக்க குடிமகனுக்கான கிரீன்கார்டை ரத்து செய்துவிட்டு தாய்நாடு திரும்பினார் ஹரி. பேரிடர் மேலாண்மை பற்றி மேலும் அறிய சென்னையில் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ முடித்துவிட்டு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து "பேரிடர் மேலாண்மை பயிற்சியாளராக" தன்னை மாற்றிக்கொண்டார்.
leave a comment