From serving Guests to serving Communities img-  ?>

கிரீன்கார்டை துறந்து தாய்நாட்டில் சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பாலாஜி!

கிரீன்கார்டை துறந்து தாய்நாட்டில் சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பாலாஜி! 

INDUJA RAGUNATHAN OCTOBER 8, 2015

 

  

 

பல இந்தியர்கள், அமெரிக்காவில் தங்கள் உயர் பதவியை விட்டுவிட்டு தாய்நாட்டிற்கு திரும்பி, சேவை செய்ய வந்த கதைகளை படித்துள்ளோம்... ஆனால் இது சற்று வித்தியாசமான கதை. ஒரு நல்ல எதிர்காலம் கொண்ட துறை மற்றும் பணியை உதறி தள்ளிவிட்டு, அமெரிக்க கிரீன் கார்டையும் நிராகரித்துவிட்டு ஓர் உன்னத பணியை தொடங்க இந்தியா திரும்பிய சென்னையை சேர்ந்த ஹரி பாலாஜியை தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் சந்தித்தோம். அவருடன் உரையாடியதில் இருந்து...

ஹரி பாலாஜியின் அமெரிக்க பயணம்

சுவிட்சர்லாந்து, சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பள்ளியில் பயின்ற ஹரி பாலாஜி ஹோட்டல் நிர்வாகத்தில் பல வருட அனுபவமுள்ளவர். 2001 ஆம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து, மேலாண்மை பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா செல்ல இவருக்கு வாய்ப்பு வந்தது. "அமெரிக்கா செல்வது என் வாழ்நாள் கனவு, என் எதிர்காலத்தை நோக்கி ஆவலுடன் அமெரிக்காவுக்கு பயணமானேன்" என்கிறார் ஹரி பாலாஜி. ஆனால் விதி வேறு மாதிரி அமைந்தது. 

இவர் பயணித்த நாள் செப்டம்பர் 11 2001 ஆம் ஆண்டு. அன்று தான் அமெரிக்கா மீதான, உலகின் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைப்பெற்றது அனைவருக்கும் தெரியும். இதனால் ஹரி பயணித்த விமானம், அவர் புறப்பட்ட சூரிச் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பல கனவுகளுடன் அமெரிக்கா புறப்பட்ட முதல் பயணமே தோல்வியில் முடிந்ததில் ஹரி பாலாஜிக்கு மிக பெரிய வருத்தம் தான். இருப்பினும், தாக்குதலுக்கு பின் அமெரிக்கா மற்றும் சூரிச் விமான நிலையங்களில் குவிந்த மக்கள் வெள்ளத்தை அந்நாட்டவர் சமாளித்த விதத்தையும், போர்கால அடிப்படையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, ஓரிரு நாட்களில் சகஜ நிலைக்கு கொண்டு வந்ததையும் பார்த்து ஆச்சர்யமடைந்தார் ஹரி. 

மேலைநாடுகளில் பேரிடர் மேலாண்மை

"ஒரு மிகப்பெரிய பேரழிவு (Disaster) நிகழ்ந்தும் எந்த சலசலப்புமின்றி ஒரு வித கட்டுப்பாட்டுடன் அரசும் அங்குள்ளவர்களும் இயங்கியது என்னை வியக்க வைத்தது. இந்தியாவில் இது போல் நிகழ்ந்தால் எம்மாதிரியான தயார் நிலை உள்ளது?" என்ற சிந்தனைகள் இவரின் மனதில் ஓடத்துவங்கின.

இரு தினங்களுக்கு பிறகு விமானங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டவுடன் ஹரி, சூரிச்சிலிருந்து மீண்டும் அட்லாண்டா சென்றடைந்தார். அமெரிக்காவில் இந்த பெரிய தாக்குதல் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டது, அரசு இயந்திரம் செயல்பட்ட விதம், மக்களின் ஒத்துழைப்பு இவைகளை செய்திகள் மூலம் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார் ஹரி.

ஹரி, பயிற்சி மேற்கொண்ட பிரபல ஹோட்டலில் கருத்தருங்கு ஒன்றில் பேசிய நியுயார்க்கின் அப்போதய மேயர் கியுலானி, தாக்குதலுக்கு பின் தாங்கள் எவ்வாறு நிலைமையை சில மணி நேரங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதை பற்றி உரையாற்றினார். "இது எனக்கு ஓர் புரிதலையும் பேரழிவின் போது, மேலைநாடுகளை விட இந்தியா போன்ற நாடுகள் எவ்வித ஏற்பாடோ, முறையையோ கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிந்தது" என்கிறார். இந்தியாவில் மழை, வெள்ளம், பூகம்பம், தாக்குதல் என எவ்வித பேரழிவு ஏற்பட்டாலும், பல நாட்களுக்கு சோகமும், இழப்புகளுடன் மீண்டெழ முடியா துன்பத்தை மட்டும் பார்த்தது தான்அவரின் நினைவுக்கு வந்தது.

மேலாண்மை பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அமெரிக்கா முழுதும் பல பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது ஹரி பாலஜிக்கு. 2005ல் அமெரிக்காவை ஹரிக்கேன் காத்ரீனா தாக்கியபோது, அவர்களின் பேரழிவு மேலாண்மை குழுக்கள் செயல்பட்டதை நேரில் பார்த்த ஹரி "காவல்துறை, மருத்துவத்துறை, அரசுத்துறை என்று அனைவரும் ஒரு சேர்ந்து பணி புரிவதே அவர்களின் பேரிடர் மேலாண்மையின் வெற்றி என புரிந்து கொண்டார். அதேப்போல் "அங்கு "வருமுன் காப்போம்" என்ற விழிப்புணர்வும், இந்தியாவில் "வந்தபிறகு பார்ப்போம்" என்ற நிலையே இருந்தது என ஆராய்ச்சியிலும், நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்" என்கிறார்.

இந்தியா திரும்பி பேரிடர் மேலாண்மை பணியை தொடங்கியது

ஹரிக்கேன் காத்ரீனா சமயத்தில் புயலில் வீடு வாசல் இழந்த பலரை தங்களது ஹோட்டலில் இலவசமாக அரசு தங்க வைத்தபோது அவர்களின் நிலைமையை நேரில் பார்த்த ஹரி பாலாஜி பல உண்மைகளையும், வாழ்வின் அர்த்தத்தையும் உணர்ந்த்தார். "நிலையற்ற உலகத்தில் நாம் வாழ்கிறோம்; இருக்கும் போது முடிந்தவரை பிறருக்கு உதவும் வகையில் சேவை என்று இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு உபயோகமான பணியை செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன்" என்கிறார் உணர்ச்சி பொங்க.

திருப்புமுனையாக அமைந்த இந்த சம்பதவத்திற்கு பிறகு, தான் விண்ணப்பித்திருந்த அமெரிக்க குடிமகனுக்கான கிரீன்கார்டை ரத்து செய்துவிட்டு தாய்நாடு திரும்பினார் ஹரி. பேரிடர் மேலாண்மை பற்றி மேலும் அறிய சென்னையில் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ முடித்துவிட்டு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து "பேரிடர் மேலாண்மை பயிற்சியாளராக" தன்னை மாற்றிக்கொண்டார். 


இந்தியாவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி 

சென்னையில் வசிக்கும் ஹரி பாலாஜி கடந்த 4 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகளை அரசின் உதவியுடன் அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என்று இந்தியா முழுதும் செய்து வருகிறார். யுனிசெஃப் மற்றும் ஐக்கிய நாடுகள்அவையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் சார்பிலும் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு சென்று பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றுகிறார். "பல உயிரிழப்புகளை கொண்ட நிகழ்வு மட்டும் பேரிடர் என்பது இல்லை. ஒரு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும் எந்த வித நிகழ்வும் பேரிடர் தான்" என்கிறார் ஹரி பாலாஜி.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளது போல் இந்தியாவிலும் பேரிடர் மோலாண்மையில் பல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை செயல்படுத்த இவர் முயற்சித்து வருகிறார். "பேரிடர் மேலாண்மையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய ஐந்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பயிற்சி அளித்துவருகிறார். 

தமிழக அரசுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் "எஸ் ஈஆர் எஸ் எச்"(SERSH - Strengthening Emergency Response System in Hospitals) என்ற கருத்துப்பட்டறை மூலம் சிறப்பு பயிற்சி முகாம்களை அண்மையில் நடத்தி முடித்துள்ளார் ஹரி பாலாஜி. எல்லா மாவட்டங்களிலும், அங்குள்ள அனைத்து துறை பற்றிய தகவல்கள், அதிகாரிகள் பெயர்களுடன் தொலைபேசி எண்கள், அவசர தொடர்பு எண்கள் என்று முக்கிய அம்சங்கள் அடங்கிய பேரிடர் மேலாண்மைக்கு உதவும் பயிற்சி கையேட்டை தமிழக அரசுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். "ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போது பொதுமக்கள் யாரை அணுக வேண்டும் என்று குழப்பம் அடைகின்றனர். மேலும் அமெரிக்கா போல் 911 என்ற ஒரு எண்ணுக்கு தகவல் தந்தால் எல்லா துறைக்கும் தகவல் சென்றடையக்கூடிய அளவில் நம்மிடம் வசதி இதுவரை இல்லை. எனவே இது போன்ற கையேடுகள் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேரிடர் நேரங்களில் முக்கிய நபர்களை அவசரமாக தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்" என்கிறார். தமிழகத்தில் வெளியிட்டது போல் இந்த கையேட்டை இந்தியா முழுதும் அந்தந்த மாநில மாவட்டங்களில் வெளியிட முயற்சித்து வருவதாக கூறுகிறார்.

சிருஷ்டி அமைப்பு மூலம் பயிற்சி

2010 ஆம் ஆண்டு முதல் "சிருஷ்டி"(Srishti) என்ற பெயரின் கீழ் பேரிடர் மேலாண்மை பயிற்சியை அளித்து வருகிறார் ஹரி பாலாஜி. தன்னை ஒரு சமூக தொழில்முனைவர் என்று அழைத்துக்கொள்ளும் ஹரி சமூகத்துக்கு தேவையான சேவையை அளித்து வந்தாலும் அதை ஒரு முறையான தொழிலாக செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். "வருமானத்துடன் சமூகப்பணியில் ஈடுபடும் போது ஊக்கமும், புதிய முயற்சிகள் செய்ய உந்துதலாகவும் இருக்கிறது" என்கிறார். தான் நடத்தும் பயிற்சிகளுக்கு அரசு மற்றும் அதை நடத்தும் சமூக நிறுவனங்களிடமிருந்து தகுந்த கட்டணம் வாங்கி கொண்டு நடத்துகிறார். 

பேரிடர் மேலாண்மை என்பது ஒரு நிகழ்வுக்கு பின் எடுக்கப்படும் நடவடிக்கை மட்டும் இல்லை எனக்கூறும் ஹரி, "பெரும்பாலும் பேரிடரில் உடலளவில் பாதிக்கப்பட்டோரை தான் காப்பாற்ற முக்கியத்துவம் கொடுப்பர் ஆனால் என்னை பொருத்தவரை பேரிடருக்கு முன் தற்காப்பு நடவடிக்கை, தேவையான முதலுதவி பயிற்சி, அவசர சிகிச்சைக்கான தயார் நிலை இவையெல்லாமும் மிக முக்கியம் என்கிறார். 

மேலும் மனதளாவில் பாதிக்கப்பட்டவர்களையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்கிறார் ஹரி. பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பங்களை இழந்தவரின் மனநிலைக்கான கவுன்சிலிங், கர்பிணிப்பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு , அடுத்து அவர்கள் வாழ்வில் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியெல்லாம் ஹரியின் பயிற்சியில் இடம் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது. பேரிடர் சம்பவ இடத்தில் நிகழும் குற்றங்கள், பாலியல் வன்முறைகள் பற்றியும் இவர் தன் கருத்தரங்குகளில் விவாதிக்கிறார்.

தொலைநோக்கு பார்வை

சில மாதங்களுக்கு முன் உலகை உலுக்கிய நேப்பாள பூகம்பத்திற்கு பின் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகியுள்ளது. எனினும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை போல இதற்கான பிரத்யேக செயல்பாட்டுக் குழுக்கள் இந்தியாவில் வரும் காலங்களில் அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் ஹரி. பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் இவர் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

"தீயணைப்புத்துறையினர் வேகமாகவும், துடிப்புடனும் உயிர்களை காப்பாற்றுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அது அவர்கள் தினமும் எடுத்துக்கொண்ட பயிற்சியின் வெளிப்பாடு. இதே போல் ஒவ்வொரு குடிமகனும் மனதளவிலும், உடலளவிலும் ஒரு பேரிடரை எதிர்கொள்ள பயிற்சியுடன் தயாராக இருந்தால் எவ்வாறு இருக்கும் என எண்ணிப்பாருங்கள்" என்று முடித்து கொள்கிறார் ஹரி...

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்புகொள்ள: http://www.haribalaji.com

leave a comment